ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

சம்ரோக்ஷனம் (கும்பாபிஷேகம்) 16.09.2013

          நாளை 16.09.2013 திங்கள் கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பத்தில் கடந்த 2000 வருடங்களுக்கு மேலாக அருள் புரிந்துவரும் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயார் சமேத லக்ஷ்மி ந்ருஸிம்மப்பெருமானுக்கு கும்பாபிஷகம் நடக்க உள்ளது. பக்தகோடிகள் அனைவரும் கலந்துகொண்டு ந்ருஸிம்ம பெருமானின் அருளை பெற வேண்டுகிறேன்.                                                                                                                                                                            

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருத்தலம் பூவரசன்குப்பம்


தீமையை அழித்து அறத்தைக் காக்கும் நோக்கில்  இறைவன் திருமால் எடுத்த அவதாரங்களில் மிகவும் குறுப்பிடத்தக்க அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.  திருமாலின் மற்ற அவதாரத்தைவிட  நரசிம்ஹ அவதாரத்தின் சிறப்பு என்னவேன்றல் பக்தனின் குறைதீர்க்கவும் அசுரன் இரண்யனை வதம் செய்யவும் பக்தன் பிரகலாதன் வேண்டியவுடன் நொடிப்பொழிதில் மனித உடலும் சிங்க தலையுடன் அவதரித்து  அரக்கன்  இரண்யனை அழித்து பிரகலாதனை காத்தவர் நரசிம்ஹர். 

நரசிம்ஹரின் இந்த சிறப்பு அவதாரத்திற்கும் ஒரு காரணம்  உண்டு, இரண்யன் தனக்கு இறப்பு ஏற்பட கூடாதென்று வேண்டி தவமிருந்து இறைவனிடம் மிகவும் சாமர்த்தியமாக தனக்கு பூமியிலோ, வானத்திலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியிலோ, இரவிலோ, பகலிலோ  மரணம் ஏற்படக் கூடாது என்றும், தேவர்கள், மனிதர்கள், அரக்கர்கள், பறவைகள் மற்றும் மிருகங்கள் போன்ற உயிரினங்களாலும் மற்றும் எந்த வகை ஆயுதங்களாலும் என் உயிர் பறிக்கப்படக் கூடாது என்றும் வரங்களைப் பெற்றான். இவ்வாறு  வரம் பெற்ற இரண்யன் தனக்கு மரணம் ஏற்படாது என்ற மமதையில் நாட்டில் உள்ள அனைவரும் கடவுளை வழிபடுவதிற்கு பதிலாக தன்னையே வணங்கவேண்டும் என்று உத்தரவிட்டான். மேலும் இறைவனை வழிபடும் அனைவரையும் சித்தரவதை செய்து சிறையில் அடைத்தான். 

இவ்வாறு நாட்டுமக்களை துன்புருத்திய இரண்யன் தன் மகனும் சிறந்த நாராயண பக்தனுமான  பிரகலாதனையும் விட்டுவைக்கவில்லை, "நாராயணன் மட்டுமே  கடவுள்' என்று சொன்ன தன் மகனையே கொல்ல முயன்றான். அந்தத் தருணத்தில்தான் தன் பக்தன் பிரகலாதனுக்காக பிரகலாதனின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரே நொடியில்  தூணில் நரசிம்மமாக அவதரித்து இரன்யனை வதம் செய்தார். இரண்யனை வதம் செய்தபிறகும் கோபம் தனியாதால் தேவர்கள் பிரகலாதனை  வணங்குமாறு வேண்டினர்.  பக்தன் பிரகலாதன் வணங்கிய பிறகு சற்று சாந்தமடைந்தாலும் நரசிம்ஹரின்  கோபம் முழுமையாக நீங்காததை உணர்ந்த தேவர்கள் லக்ஷ்மி தேவியிடம் முறையிட்டு இறைவனை  சாந்தபடுதுமாறு வேண்டினர். லட்சுமி தேவியை கண்டவுடன் முற்றிலும் உக்கிரம் நீங்கிய நரசிம்ஹர் லட்சுமியை மடியில் அமர்த்தியபடி சாந்த சொரூபராக ஸ்ரீ லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுத்தார். 

நரசிம்ஹர் அவதரித்த இடம் தற்போது அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது, இது ஆந்திர மாநிலத்தில் உள்ளது.  சப்தரிஷிகள் அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்கள் இரண்யவதத்தை காண விரும்பி இறைவனை வேண்டி தவம் இருந்தனர் அவர்களுக்காக திருமால் காட்சி கொடுத்த இடம் தான் பூவரசன்குப்பம். இத்திருத்தலம் தென்அஹோபிலம் என்று போற்றப்படுகிறது. 

இத் திருக்கோவில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் முதலாம் பல்லவ மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய எட்டு நரசிம்மர் தலங்களில் நடுவில் இருப்பது பூவரசன்குப்பம் ஆகும். அதாவது பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில், பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.


இத்தகைய சிறப்புவாய்ந்த இத்திருத்தல மூலவர் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அனைத்துக்கொண்டிருக்கிறார். வலது கையால் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். தாயாரின் ஒரு கண் நரசிம்மரைப் பார்த்துக் கொண்டிருக்க, மற்றோர் கண்   நம்மை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ர கலச திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். லட்சுமி நரசிம்மரை வேண்டினால் கடன்கள் தீரும், செல்வம்  குவியும், சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் உண்டு. இக்கோவிலில் பக்தர்கள் அனைவரும் சட்டை பனியன் கழற்றி தான் உள்ளே செல்லவேண்டும் என்பது குறுப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்புவாய்ந்த இத்திருத்தலம் விழுப்புரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலுள்ளது. விழுப்புரம் பண்ருட்டி சாலையில் கள்ளிப் பட்டியில் இறங்கினால் இத்தலம் 3 கி.மீ.  தொலைவில் உள்ளது. விழுப்புரம் புதுச்சேரி சாலையில் சிறுவந்தாடில் இறங்கினால் இத்தலம் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.




ஒருமுறை இல்லையில்லை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இவ் ஆலயம் சென்று ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹரை தரிசித்தவிட்டு வாருங்கள் உங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெருகுவதை நீங்களே உணர்வீர்கள்.