வெள்ளி, 16 அக்டோபர், 2015

பூஜைகள் செய்ய புதிய யோசனைகள்.

சமீபகாலமாகப் பலவிதமான நிகழ்வுகளுக்கு இறைவன் கிருபையை வேண்டி விதம் விதமான பூஜைகளை, பூசகரைக் கொண்டு புரிவது நம்மின மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. ஆரம்பத்தில் கல்யாண வைபவம், அந்திரட்டி, ஆட்டத்திரி எனச் சிலவற்றுக்கு மட்டுமே செய்யப்பட்டுவந்த பூசைக் கிரிகைகள், மக்களிடையை வசதியும், செல்வமும் பெருக, இப்பொழுது பெரும்பாலோர் புது மனை புகுதல், பூப்புனித நீராட்டுதல், குழந்தை பிறந்த துடக்கு கழித்தல் எனப் பலவிதமானவற்றை 'வெகு விமரிசையாக' பூசகரைப் பிடித்து, மந்திரம் ஓதிப் பெரிய விழாக்கள் ஆக்கிவிட்டார்கள்., இதனால் இப்பூசகர்கள் பாடு கொண்டாட்டமாகி விட்டது. ஏற்பட்ட மவுசினால், உண்மையில் இவர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. அதனால்தானோ என்னவோ, மேலை நாடுகளில், மற்றைய தொழில் புரிபவர்கள் போலல்லாது, கோவில்களில் வேலையும் அளித்து, அருகினிலே வீடும் கொடுத்து, தனிப்பட்ட வெளி வேலையும் செய்யலாம் என்ற அனுமதியும் வழங்கி இருக்கும் ஒரே ஒரு தொழில் இந்தப் பூசகர் வேலைதான் என்பது உண்மையிலும் உண்மை. இவர்கள், மக்களின் கடவுள் நம்பிக்கையை பாவித்துப் பலவிதமான யுக்திகளின் மூலம் தங்கள் வருமானங்களைப் பெருக்கிக்கொண்டு போவதில் மிகவும் சாமர்த்தியர்கள். கடவுள் பயத்தினால் இவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடும் பெரும் கூட்டமே இருப்பதனால், இவர்கள் பல புதிய காரணங்களைக் காட்டி, இல்லாததுக்கெல்லாம் செல்லாத மந்திரங்களைச் { படுபிழையாகச் சொன்னாலும் புரியாத மொழிதானே }சொல்லி, பொல்லாத பூசைகள் செய்து முடித்து ஒரு பெரிய தொகையை வசூலித்துக் கொள்ளுவர். சமீபத்தில் ஒரு குடும்பம் தங்கள் புதிய வீட்டுக்கு ஒரு பூசகரை அழைத்துப் பூசை செய்து குடி புகுந்து, முடிவில் அவருக்கு அவர் உள்ளம் மகிழப் பெரும் தொகை ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தினர். வெளியில் வந்தவர், நின்று வீட்டைப் பார்த்து அவர்களின் தலையில் ஒரு பெரிய ஐஸ் கட்டியை வைத்துச் சொன்னார், "உங்கள் வீடு நல்ல விசாலமாகவும் அழகாகவும் இருப்பதால் ஆட்களின் கண்ணூறு பட்டுவிடும். ஆதலால் இந்த நாவூறுகளில் இருந்து பாதுகாக்க வேறொரு பூசை கட்டாயம் செய்யவேண்டும்" என்று. உடனே இந்த 'அலுகோசுகள்' இன்னொரு 'நல்ல' நாளில் கட்டணம் செலுத்தி, மேலுமொரு பூசைசெய்துகொண்டதால் இப்பொழுது எல்லா நாவூறுகளில் இருந்தும் காப்பாற்றப்பட்டு நிம்மதியாக இருக்கின்றார்கள். தெரியாமல்தான் கேட்கிறேன்; வீடு குடிபுகும்போது செய்யும் பூசைகளே, இந்த வீட்டையும், இருப்பவர்களையும் கிரகங்களின் கெட்ட பார்வைகள், தீய சக்திகளின் கொடிய தாக்கங்கள், எதிர்மறையான அதிர்வுகள் முதலியவற்றில் இருந்து காப்பாற்றுவதற்குத்தானே செய்யப்படுகின்றன என்று சொல்லுகின்றார்கள். அப்படி என்றால், அந்தக் கணபதி ஹோமம், சங்கொலி, தேங்காய், வெற்றிலை, மாவிலை ஒன்றும் இவற்றில் இருந்து காப்பாற்றுவதற்காக இல்லையா? அடடே, யுத்தம், வெள்ளம், நில நடுக்கம் போன்றவற்றால் ஒரேசமயத்தில் தரைமட்டமாகும் வீடுகள் எல்லாம் இப்படியான கிரிகைகள் முறைப்படி செயயாதனால்தான் ஏற்பட்டதோ? அதனால்தான் சொல்கின்றேன், மனித குலம் பசி, பட்டினி, தோல்வி, அழிவு, விபத்து போன்றவற்றிலிருந்து காப்பாற்றப்படவேண்டும் என்றால் புதிய காரணிகள், புதிய பூசைகள், புதிய மந்திரங்கள், தேவையானவிடத்து புதிய கடவுள்களும் பிந்தாமல் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதற்கு, என் சின்ன மூளைக்கு எட்டிய சில புதிய யோசனைகளைத் தர விரும்புகின்றேன். சொல்லப்படும் எல்லாவற்றிற்கும் கட்டாயமாக, ஐயரை அழைத்து, முறைப்படி பூசை செய்து முடிப்பிக்கவேண்டும். * இறந்த ஒவ்வொருவரும் உங்களைத் தொடர்ந்து ஆசீர்வதிக்க, அவரவர் பிறந்த நாளில் ஓர் 'ஆசி பூசை'. *உறவாடா உறவுகள் உறவு வேண்டி ஒரு 'பந்த பூசை' *இருக்கும் உறவினர் உதவி கோரி ஒரு 'சொந்த பூசை' *பிள்ளைகள் ஒற்றுமையாக வாழ ஒரு 'பாச பூசை' *பணக்காரருடன் பலமான பிணைப்பு நிலைக்க ஒரு 'பிணைபூசை' * வீட்டினுள் பணம் கொட்ட, வருடா வருடம் ஒரு 'லட்சுமி பூசை *அயல் வீட்டாருடன் நட்புடன் இருக்க ஒரு 'நட்பு பூசை' *சாந்திமுகூர்த்த நேரம் ஆரம்பிக்கப் படுக்கையறையில் ஒரு'படுபூசை' *கருத்தரித்தால் ஒரு 'கரு பூசை' *கர்ப்பணிகளுக்கு ஒரு 'சிசு பூசை' *பிள்ளை நல்ல நாளில் பிறக்க 'கிரக பூசை' *பிள்ளை நல்லாய் பிறக்க 'நல பூசை' *பிள்ளைகள் பெயர் வைக்கும்போதும்,பல்லு முளைக்க , சிரிக்க, உடம்பு பிரட்ட, தவழ , உணவு அருந்த, நடக்க, கதைக்கத் தொடங்கும்போதும் ஒரு 'வளர்ச்சி பூசை'(இவற்றுக் கெல்லாம் அடிக்கொருக்கால் வர பூசகருக்கு சிரமமெனில் ஒருவர் இறந்தபின் 12 மாதமாசிகத்தானும் சேர்த்துக் கொடுப்பதுபோல் அவருக்கு கொடுக்கவேண்டியதை சேர்த்துக் கொடுத்தால் பெரும் பேறாகும்). *பிள்ளைகள் ஒவ்வொருவரும் பாடசாலை செல்லத் தொடங்கும்போதும், ஒவ்வொரு வகுப்பு மேலேறும்போதும் ஒரு 'பள்ளி பூசை'(மேற் கூறியதுபோல் 12 பூசையும் சேர்த்தும் செய்யலாம்). * சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி என்று எல்லா விஷேடங்களுக்கும் முறையான 'விஷேட பூசைகள்' *விசேட பரீட்சைகளில் பிள்ளைகள் அதி உயர் சித்தி அடைய ஒரு 'சித்தி பூசை.'. *பல்கலைக்கழகம் நுழையமுன் ஒரு 'நுழை பூசை' * படிப்பு முடித்து வேலை தொடங்கும்போது ஒரு 'வேலை பூசை * வேலையில் பதவி உயர்வு கிடைக்க ஒரு 'உயர்ச்சி பூசை" *ஒவ்வொருவரும் ஒரு கணனியோ, தொலைபேசியோ மற்றும் விளையாட்டுக் கருவியோ வேண்டும்போது அவை பழுதாகாமல் இருக்க ஒரு 'காவல் பூசை' *கணணி வைரசினால் தாக்கப்பட்டுப் பழுதாகாமல் இருக்க ஒரு 'வைரஸ் பூசை' *எந்தவொரு வண்டி வாங்கும்போதும் ஒரு 'வாகன பூசை' * விமானம் ஏறுமுன் ஒரு 'காப்பு பூசை' * விமானம் விட்டு இறங்கிய பின் ஒரு 'நன்றி பூசை' *தெருவில் இறங்கி பாதுகாப்போடு நடப்பதற்கு வருடம் ஒருமுறை என்றாலும் ஒரு 'விபத்து பூசை' *பிள்ளை வேண்டி ஒரு 'குழந்தை பூசை' * பிள்ளைகள் போதுமென்று கண்டால் ஒரு 'போதும் பூசை' * பிள்ளை பிறந்தால் ஒவ்வொரு மாசமும், பின்னர் ஒவ்வொரு வருஷமும் ஒரு 'சேம பூசை'. * மன அழுத்தம் வராமல் இருக்க ஒரு 'அழுத்த பூசை' *காதல் வராமக்காக்க ஒரு 'கட்டுபூசை' * காய்ச்சல் வராமல் இருக்க ஒரு 'காய்ச்சல் பூசை' * வயிற்றால் சுகமே போக ஒரு 'பேதி பூசை' *இதேபோல 'இருமல் பூசை', 'தடிமன் பூசை' என்று பல. *திருமண நினைவு நாளில் ' மண பூசை' * (அவர்கள் கோபித்துக் கொண்டாலும்)மற்றைய சமய கடவுள்களின் அனுக்கிரகம் கிடைக்க 'ஜேசு பூசை', 'அல்லா பூசை' என்று பலவும். இப்படி, இப்படி இஷ்டப்படி பலவிதமான காரணங்களுக்கு உரிய பூசைகளை எல்லாம் முறைப்படி செய்துவந்தால், பூசகர் குடும்பம் எந்தவொரு கஷ்டமும் இன்றி வாழ்வதுபோல நீங்களும் வாழலாம். ஏன் நினையாப் பிராகாரமாக இடருக்குள் விழவேண்டும்? எதற்கும், மண்டையைப் போட்டுக் குழப்பிச் சரியோ பிழையோ, விடயம் இருக்கோ இல்லையோ, அல்லது உண்மையோ பொய்யோ என்று ஆழ, அமர இருந்து பகுத்தறிய முனையாமல், எல்லோரும் செய்கிறார்கள்தானே என்றுவிட்டுப் புதிய இத்தகைய பூசைகளையும் சேர்த்துச் செய்யுங்கோவன்! என்ன, வாழ்க்கையில் ஒருமுறைதானே! என்றால்தானே அவர்களும் தொடர்ந்து பிழைக்கலாம்! (அவர்களும் பிழைத்தால் தானே)உங்களையும் வாழ வைக்கலாம்! பூசைகள் பல செய்து ஆசைகள் பல தீர்ந்து பெருவாழ்வு வாழ்வீர்! பி.கு.: *எந்தவொரு பூசையும் சேர்த்து எல்லோருக்கும் என்று ஒன்றாகச் செய்தால் பலன் கிடைக்காது. தனித்தனியே செய்தல் வேண்டும். *செய்யும் பூசைகளும், பூசைகளின் பெயர்களும் தமிழில் சொல்லாது சம்ஸ்கிருத மொழியில் சொன்னால்தான் சக்தி பலம். * பூசகருக்கு எவ்வளவுக்கு, எவ்வளவு கூடுதல் கூலி கொடுத்து அவரைச் சந்தோசப் படுத்துகின்றீர்களோ அவ்வளவுக்கு, அவ்வளவு பலனும் பெருகும். இதில் கஞ்சத்தனம் பார்த்தால் தண்டிக்கப் படுவீர்கள். *கூலியைப் பணமாகவோ, அவர்கள் விரும்பும் பொருளாகவோ கொடுக்கலாம். லக்சரி ஸ்போர்ட்ஸ் கார் கொடுப்பது பெரும்பாலும் விரும்பத்தக்கது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

நகைக் கடன் பின்னணி

அபரிமிதமாகப் பெருகிக்கிடக்கின்றன அடகுக் கடைகள். முத்தூட் ஃபைனான்ஸ், முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்ட் ஃபைனான்ஸ், கொசமற்றம் ஃபைனான்ஸ்… என ஒவ்வொன்றும் சங்கிலித் தொடர் நிறுவனங்களாக உருமாற்றம் பெற்று, மிகப் பெரிய கார்ப்பரேட்களாக உருவெடுத்திருக்கின்றன. மக்களின் வாழ்க்கை நெருக்கடிகள் அதிகரிக்க, அதிகரிக்க… இந்த நகைக்கடைகளின் எண்ணிக்கையும் அவர்களின் லாபமும் அதிகரிக்கின்றன. விடிந்து எழுந்ததும் கையில் இருக்கும் கடைசி 100 ரூபாயுடன் டாஸ்மாக் வாசலில் காத்திருக்கும் தமிழன், தன்னிடம் இருக்கும் கடைசி கிராம் தங்கத்துடன் அடகுக் கடை வாசலில் தவம் கிடக்கிறான். இதன் பின்னணியைத் தெரிந்துகொள்ள இந்தியர்களின் தங்க மோகத்தில் இருந்து தொடங்க வேண்டும். இந்தியாவைப்போல, தங்கத்தின் மீது மோகம் கொண்ட ஒரு நாடு உலகில் இல்லை. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் மூட்டை மூட்டையாக அள்ளப்பட்ட தங்க நகைகளை வைத்து மொத்த இந்தியாவுக்கும் பட்ஜெட் போடலாம். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொடுவாலியில் 50 மீட்டர் இடைவெளியில் 200 நகைக்கடைகள் இருக்கின்றன. வேலூரில் தங்கத்தாலேயே இழைத்து, கோயில் கட்டி ஆன்மிக சந்தை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகின் மொத்தத் தங்கத்தில் 11 சதவிகிதத்தை இந்தியர்கள் வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் நடைபெறும் 25 சதவிகிதம் குற்றங்களுக்கு தங்கம் சார்ந்த காரணங்களே பின்புலம். உலக தங்கக் கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் இருக்கும் தங்கத்தின் அளவு 22 ஆயிரம் டன்களுக்கும் அதிகம். உலகப் பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்த ‘2008 உலகப் பெருமந்தம்’ (Great Recession in 2008) நிகழ்ந்தபோதும் இந்தியர்களின் தங்கம் வாங்கும் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் என்பது ஒரு நம்பகமான சேமிப்பு என்பதைத் தாண்டி, அது சமூக கௌரவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 40 லட்ச ரூபாய்க்கு ஒரு கிரவுண்டு நிலம் வாங்கினால்கூட, அதைத் தூக்கி தலையில் வைத்துக்கொள்ள முடியாது. நகை வாங்கினால் அணிந்துகொண்டு தங்கள் கௌரவத்தை உலகத்துக்குப் பறைசாற்றலாம். அதனால்தான் மக்களின் தங்கப் பித்து இடைவிடாமல் தொடர்கிறது. ஆனால், வாங்கிய தங்கம் எல்லாம் அணிவதற்காக அல்ல. சரிபாதி அல்லது அதையும்விட அதிகமான நகைகள் அடகுக் கடைகளுக்கே செல்கின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அடகுக் கடைகள் என்பவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். தங்க நகை மட்டும் அல்லாமல், பித்தளை பாத்திரங்களையும் அங்கு அடகு வைக்கலாம். அடகுக் கடை நடத்துபவர், சமூக மதிப்பில் சற்று கீழ் வைத்துதான் மதிப்பிடப்படுவார். நகையை அடகுவைக்கச் செல்பவர்கள் மூன்றாம் நபருக்குத் தெரியாமல் அதைச் செய்ய நினைப்பார்கள். அடகுபிடிப்பதும், அடகுவைப்பதும் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத, சங்கடமான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது, இரு தரப்புக்கும் சங்கடம் இல்லை. ‘கையில இருக்கு தங்கம்… கவலை ஏன்டா சிங்கம்?’ எனத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து நம் நகைகளை அடகுவைக்க அறைகூவல் விடுக்கிறார்கள் நடிகர்கள். மூன்று நிமிடங்களில் ‘ஒண்ணுக்கு’க்கூடப் போக முடியாது. ஆனால் இவர்கள் ‘மூன்றே நிமிடங்களில் தங்க நகைக்கடன்’ தருவதாக அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அடகு என்பது சமூகத்தின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. ‘முத்தூட் ஃபைனான்ஸ்’தான் தங்க நகைக் கடன் வழங்குவதில் உலகிலேயே பெரிய நிறுவனம். இதற்கு இந்தியா முழுவதும் 4,256 கிளைகள் இருக்கின்றன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் வங்கிக்கே, 2,100 கிளைகள் மட்டுமே. 2009-ல் இந்த நிறுவனத்துக்கு 985 கிளைகள்தான் இருந்தன. அதன் பிறகான இந்த ஐந்து ஆண்டுகளில் 3,000-த்துக்கும் அதிகமான புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. கணக்கிட்டுப்பார்த்தால் ஒரு நாளைக்குச் சராசரியாக இரண்டு புதிய கிளைகள். 2011-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி ஒரே நாளில் 103 புதிய கிளைகளைத் திறந்துள்ளது இந்த நிறுவனம். 8,500 கோடி ரூபாய் மதிப்புள்ள மணப்புரம் கோல்டு ஃபைனான்ஸ்தான், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் தங்க நகை அடகு நிறுவனம். 2008-2009 நிதியாண்டில் 165 கோடியாக இருந்த இதன் வருவாய், 2012-2013ம் ஆண்டில் 2,217 கோடியாக அதிகரித்தது. நான்கே ஆண்டுகளில் வருவாய் விகிதம் மலைக்கவைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. குஜராத், அசாம், ஜார்கண்ட், அந்தமான் நிக்கோபார், டையூ டாமன் என இந்த நிறுவனத்துக்குக் கிளைகள் இல்லாத இடங்களே இல்லை. கேரளாவில் மோகன்லால், தமிழ்நாட்டில் விக்ரம், ஆந்திராவில் வெங்கடேஷ், கர்நாடகாவில் புனித் ராஜ்குமார், இந்தியில் அக்ஷய் குமார் என அந்தந்த மொழியின் முன்னணி சினிமா ஹீரோக்களைத் தன் விளம்பரத்தில் நடிக்கவைக்கிறது இந்த நிறுவனம். (கேரளாவில் மலபார் கோல்டு நிறுவனத்துக்கும் மோகன்லால்தான் விளம்பர அம்பாசிடர். மலபார் கோல்டில் தங்கம் வாங்கச் சொல்லும் மோகன்லால், மணப்புரம் கோல்டில் அடகு வைக்கச் சொல்கிறார்.) எதற்காக அடகு வைக்கின்றனர்? விவசாய கிராமங்களில் வெள்ளாமைத் தொடங்குகிற நேரத்தில் ஒவ்வொன்றுக்கும் பணம் வேண்டும். உழவுசெய்ய, நடவு நட, உரம் வாங்க எல்லாமே செலவுதான். கையிருப்பில் இருந்து எடுத்துச் செலவு செய்யும் அளவுக்குத் தமிழக விவசாயி வளமாக இல்லை. எனவே செலவை ஈடுகட்ட முதல் பலியாவது அந்த விவசாயியின் மனைவி அணிந்திருக்கும் தோடு, மூக்குத்தி, வளையல் போன்றவைதான். இதனால் விவசாயம் ஆரம்பிக்கும் காலத்தில் அருகில் உள்ள அடகுக் கடையின் வியாபாரம் ஏறுமுகத்தில் இருக்கிறது. கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குத் தொழிலுக்குச் செல்லும்போது பணம் தேவை. அதற்கும் அடகுக் கடைகளுக்குத்தான் செல்கின்றனர். மதுரை, தேனி சுற்று வட்டாரப் பகுதிகளில் கல்யாணம், காதுகுத்து போன்றவற்றுக்குச் செய்முறை செய்வதற்காகவே மக்கள் நகையை அடகு வைக்கின்றனர். தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இளைஞர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக, நகைகள் அடகுக் கடைக்குச் செல்கின்றன. கல்யாணச் செலவுகளுக்காக, மகளின் பிரசவத்துக்காக, கோடை வெயிலைச் சமாளிக்க ஏ.சி வாங்க, இன்னோர் அவசரக் கடனை அடைப்பதற்காக… என நகையை அடகு வைக்கக் காரணங்களுக்குப் பஞ்சம் இல்லை. அதில் இரண்டு காரணங்கள் குறிப்பிட்டுக் கவனிக்கத் தகுந்தவை. ஒன்று மருத்துவச் செலவுகள். இன்று, நோயாளிகள் இல்லாத வீடு இல்லை. ஒரு திடீர் நோய், வாழ்நாள் சேமிப்பையே காவு வாங்கி குடும்பத்தை தெருவில் நிறுத்துகிறது. அரசு மருத்துவமனைகளின் அவலமும், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் செலவுகளின் அதிகரிப்பும் குடும்பத்தின் ஒரே சேமிப்பான நகைகளைக் காவு கேட்கிறது. மற்றொன்று கல்விச் செலவுகள். தலையை அடகு வைத்தாவது பிள்ளைகளைப் புகழ்பெற்ற பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்க பெற்றோர்கள் தயாராக இருக்கும்போது, நகையை அடகு வைக்கத் தயங்குவார்களா? ஒவ்வோர் ஆண்டும் பள்ளி தொடங்கும் நாட்கள்தான் அடகுக் கடைகளுக்கு அறுவடைக் காலம். பள்ளிகள் திறக்கும் காலத்தில் ‘ஸ்கூல் ஓப்பன் மேளா’ என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, சில சலுகைகளையும் வழங்கி, மக்களை அடகு வைக்க ஊக்குவிக்கிறார்கள். மணப்புரம் கோல்டு ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சேர்மன் நந்தகுமார் தரும் தகவலின்படி, நகை அடகு வைப்பதற்கான காரணங்களில் இப்போது பிரதானமாகவும் முதன்மையானதாகவும் இருக்கின்றன கல்விச் செலவுகள். குறிப்பாக பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் நகர்ப்புறங்களில் அடகுக் கடைகளின் அதிகரிப்புக்கு ஆதாரமாக இருப்பது கல்விச் செலவுகள்தான். மணப்புரம் நிறுவனத்தின் வர்த்தகத்தில் 40 சதவிகிதம் பெருநகரங்களில் தான் நடக்கிறது. அரசு வங்கிகள் என்னவாயின? பொதுத்துறை வங்கிகளிலும் தங்க நகைகளை அடகு வைக்கலாம். இங்கு நகைக் கடனுக்கான வட்டிவிகிதம் மிகக் குறைவு. ஆனால், மக்கள் ஏன் இந்தத் தனியார் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்றால், பொதுத் துறை வங்கிகளில் நகை அடகு பிடிப்பதற்கான நடைமுறைகள் சிக்கலானவை. பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அப்படியே சமர்ப்பித்தாலும் நகையின் மதிப்பில் 60-70 சதவிகிதம் அளவுக்கே கடன் கிடைக்கும். கால் பவுன், அரை பவுன் எடுத்துச் சென்றால், அடகு பிடிக்க மறுக்கிறார்கள். குறைந்தபட்சம் 2 பவுன் அல்லது 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் அடகு வைக்க முடியும் எனத் திருப்பி அனுப்பிவிடுகின்றனர். ஒவ்வொரு வங்கியிலும் இந்தக் கெடுபிடி வேறுபடுகிறது. மேலும், அடகு வைப்பதற்கு அந்த வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். கிராமத்தில் இருந்து அருகில் உள்ள சிறுநகர வங்கி ஒன்றில், நகையை அடகு வைப்பதற்காக ஒருவர் வந்தால், ஒரு நாள் ஓடிவிடுகிறது. ஆனால் தனியார் அடகு நிறுவனங்களில் அதிகபட்சம் 10 நிமிடங்கள்தான். 2 கிராம் எடுத்துச் சென்றால்கூட வாங்கிக்கொண்டு பணம் தருகிறார்கள். நகையையும் அடையாள அட்டையையும் மட்டும் எடுத்துச்சென்றால் போதும். அவர்களே நம்மைப் புகைப்படம் எடுத்து, அடையாள அட்டையை ஜெராக்ஸ் எடுத்து, விண்ணப்பத்தை நிரப்பி, கையெழுத்துப் பெற்று பணத்தைத் தந்துவிடுகின்றனர். ஓர் ஊரில் இருந்து தொடர்ந்து 100 பேர் அடகு வைக்க வருகிறார்கள் என்றால், ‘எதுக்கு நீங்க இவ்வளவு தூரம் அலையிறீங்க? நாங்க வர்றோம்’ என அங்கும் ஒரு கிளை ஆரம்பித்துவிடும் அளவுக்கு அதிவேகத்தில் இருக்கிறது இவர்களின் கஸ்டமர் சர்வீஸ். கிராமப்புறங்களில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட கூட்டுறவு வங்கிகள் இருக்கின்றன. இவற்றில் விவசாயத்துக்காக நகைகளை அடமானம் வைத்தால், ஆறு மாதங்கள் வரையிலும் வட்டியில்லா கடன் பெறலாம். பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுகுறித்த விவரமே தெரிவது இல்லை. அரசு இதுபற்றி எந்த விழிப்புஉணர்வையும் ஏற்படுத்தவும் இல்லை. இதனால் இந்தப் பணத்தை, அந்தக் கூட்டுறவு வங்கிக்கு தலைவர், செயலாளர் என நிர்வாகிகளாக இருப்பவர்களே பல்வேறு பினாமி பெயர்களில் அல்லது போலி நகைகளை வைத்து கடன் வாங்கி கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். அடகுக் கடைகளால் ஆதாயமே இல்லையா? ‘இது கழுத்துல கிடந்ததைவிட கடையில இருந்த நாட்கள்தான் அதிகம்’ என்பது நம் அம்மாக்கள் அடிக்கடி சொல்லும் வசனம். எவ்வளவோ சிரமங்களுக்கு இடையிலும் நம் குடும்பங்களில் தங்க நகை வாங்குவதே ஓர் ஆத்திர, அவசரத்துக்கு அடகு வைத்துக்கொள்ளலாம் என்பதற்காகத்தான். இதில் பெரும் பகுதி உண்மை இருக்கிறது. நான்கைந்து பவுன் நகையை வைத்துக்கொண்டு அடகு வைத்து, மீட்டு, மீண்டும் அடகு வைத்து, மறுபடியும் மீட்டு… இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடாத தமிழ்க் குடும்பம் ஏது? நம் ஒவ்வொருவரும் இதற்கு சாட்சிகளாக இருக்கிறோம். உறவுகள் உதவாத நிலையில், சுற்றம் கைவிட்ட நிலையில் தங்கள் கையிருப்புத் தங்கத்தை அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்கின்றனர். இப்படி நகை அடகின் மூலம் கடும் துயரத்தின் கசப்பான தருணங்களை நீந்திக் கடந்தவர்கள் உண்டு. ஆனால், இது எல்லாம் உள்ளூர் நகைக் கடைகளில்தான். இந்தச் சங்கிலித் தொடர் அடகு நிறுவனங்களில் ஒரு நாள் வட்டி கட்டத் தவறினாலும் மீட்டர் வட்டி, கந்து வட்டியைவிட அதிகமாகப் போட்டுத் தாக்கிவிடுகின்றனர். இரண்டு, மூன்று மாதங்கள் கட்டாமல் விட்டுவிட்டால், பெரும் தொகை எகிறிவிடுகிறது. ‘பணத்தைக் கட்டி நகையை மீட்பதைவிட அப்படியே விட்டுவிடுவதுதான் லாபம்’ என நம்மையே எண்ண வைத்துவிடுவார்கள். சொல்லப்போனால் அதுதான் அவர்களின் நோக்கமும்கூட. அதனால்தான் நகையின் மதிப்பில் அதிகபட்சம் எவ்வளவு சதவிகிதம் தர முடியுமோ அவ்வளவு தருகின்றனர். அப்படி வழங்குவது, உங்கள் கஷ்டத்தைத் தீர்க்க நினைக்கும் கருணை அல்ல; சிக்கும்போது வளைத்துப்போட்டுவிடும் குள்ளநரித்தனம். மீட்கப்படாத நகைகள் என்னவாகின்றன? தினசரி செய்தித்தாளின் முழு இரண்டு பக்கங்களிலும் வெறும் எண்களாகத் தென்படும் விளம்பரத்தை நீங்கள் அவ்வப்போது பார்த்திருக்கலாம். ஏதோ ப்ளஸ் டூ பரீட்சை முடிவுபோல இருந்தாலும், அது தங்க நகை அடகுக்கடையின் ஏல அறிவிப்பு. நகையை அடகு வைத்து கடன் பெற்றவர்கள் உரிய காலத்தில் வட்டியையும் அசலையும் கட்டி மீட்காததால், அடகுக் கடைகள் நகையை ஏலம் விடுகின்றன. செய்தித்தாளை வாசிக்கும் மக்கள், சுவாரஸ்யம் இல்லாத அந்தப் பக்கத்தைக் கடந்துவிடுகிறார்கள். ஆனால் அந்த எண்களின் உரிமையாளர்களுக்கு விளம்பரத்தைப் பார்க்கும்போது வலியும் வேதனையும் துளித் துளியாக அதிகரிக்கிறது. இவர்கள் வசூலிக்கும் வட்டியின் அளவைப் பாருங்கள். ஒரு மாதம் வரை 14 சதவிகிதம், ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை 17 சதவிகிதம் எனத் தொடங்கி, 12 மாதங்களுக்குப் பிறகு வட்டி 26 சதவிகிதம் ஆகிவிடுகிறது. சேட்டு கடையில் கொஞ்சம் முன்பின் இருந்தாலும் ஒரு நாள், ஒரு வாரம் அனுசரித்துப் பேசிக்கொள்ள முடியும். ஆனால் இங்கு, அரை நாள் தாண்டிலும் வட்டிவிகிதம் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுவிடும். பொதுவாக அடகு வைத்த நாளில் இருந்து ஓர் ஆண்டு ஏழு நாட்களானால், கெடு கடந்துவிட்டது எனப் பொருள். அந்த நகை ஏலம் விடப்படுவதற்கான தகுதியைப் பெற்றுவிடுகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்குப் பதிவு அஞ்சலில் தெரியப்படுத்தி, நகைகள் ஏலம் விடப்படும். ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்றாலும் பெரும்பாலும் தங்க நகை வியாபாரிகள்தான் வருவார்கள். நகையை உருக்கினால் என்ன மதிப்பு வரும் என்பதைக் கணக்கிட்டு அதன்படி ஏலம் எடுப்பார்கள். ஒரு பவுன், அரை பவுன் அடகு வைத்தவர்களில் இருந்து 50 பவுன் அடகு வைத்தவர்கள் வரை பலர் மீட்காமல் விடுகின்றனர். இப்படி மீட்காத நகைகளை ஏலம் விடுவது தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. அடகுக் கடைக்கு என்ன ஆதாயம்? பிரமாண்ட நகை அடகு நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆரம்பத்திலேயே நகையின் அதிகபட்ச மதிப்புக்குக் கடன் தந்துவிடுகின்றனர். ஆகவே, மீட்காமல் விடும் நகைகளை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் தொகை அவர்களைப் பொறுத்தவரை சிறியது. வட்டியின் மூலம் ஒரு பெருந்தொகை கிடைக்கிறது. அதைவிட நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய மற்றொன்றும் இருக்கிறது. சில தங்க நகை அடகு நிறுவனங்கள் மக்களிடம் அடகு பிடிக்கும் நகைகளை, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, பொதுத் துறை வங்கிகளில் மறு அடமானம் வைக்கின்றன. நாம் நகைகளை அடகு வைக்கும்போது கையெழுத்திடும் ஆவணங்களைக்கொண்டு, அடமானக் காலத்தில் அந்த நகைகளை அவர்களின் சொத்துக்களாக (Asset) கணக்குக் காட்ட முடியும். அந்தச் சொத்து ஆவணங்களின் அடிப்படையில் மறு அடமானக் கடன் பெறுகின்றனர். அதாவது நாம் அடகு வைக்கும் நகைகளை அப்படியே எடுத்துச் சென்று மறு அடகு வைப்பது இல்லை. அந்த ஆவணங்களை மட்டுமே இப்படிச் செய்கிறார்கள். இப்படி பெறப்படும் கடனுக்கு சுமார் 10 முதல் 13 சதவிகிதம் வரையிலும் வட்டி. ஆனால், மக்களுக்கு வழங்கும் தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம் இதைவிட அதிகம் என்பதை மேலே பார்த்தோம். நம் நகையைக்கொண்டே குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி, நமக்கு அதிக வட்டிக்குக் கடன் தருகிறார்கள். இடைப்பட்ட வித்தியாசம் இவர்களுக்கு லாபம். இப்படியாக அரசின் விதிமுறைகளில் புகுந்து புறப்படும் இந்த அடகு நிறுவனங்கள் மக்களின் உழைப்பை தங்கள் லாபமாக மாற்றுகின்றன. பொருளாதார நெருக்கடி அதிகரிக்க… அதிகரிக்க… தங்கள் கையிருப்புத் தங்கத்தை அடகு வைத்து வாழவேண்டிய நிர்பந்தத்துக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். வேலைப்பறிப்புகளும், புதிய வேலை கிடைக்காத சூழலும் எல்லா துறைகளிலும் நிறைந்திருக்கும் இந்த நாட்களில், அடகுக் கடைக்கு அடிக்கடி போகவேண்டிய வாழ்க்கை நெருக்கடி உருவாகியிருக்கிறது. மக்கள் துயரத்தில் வாடும் இந்தக் காலம்தான் அடகுக் கடைகளின் அடைமழைக் காலம். அவர்களுக்கு எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம். ஆனால், இருக்கும் கடைசிக் குண்டுமணித் தங்கத்தையும் அடமானம் வைத்துதான் வாழ முடியும் என்ற நிலையில் தன் குடிமக்களை வைத்திருப்பது இந்த அரசுக்கு அவமானம் இல்லையா? தங்கம் எனும் மாயை! ”20 ஆண்டுகளுக்கு முன்பு உலகமயமாக்கல் அறிமுகமானபோது, இந்தியாவில் மக்களின் செலவிடும் ஆற்றலை ஓர் அளவுக்கு மேல் அதிகரிக்கவைக்க முடியவில்லை. ஆரம்ப ஆண்டுகளில் நிறுவனங்கள் இதில் தோல்வி அடைந்தன. இப்போதும் 20, 25 வயதை ஒட்டியிருக்கும் இளைஞர்கள்தான் செலவு செய்யும் பிரிவினராக இருக்கிறார்கள். கல்யாணம் முடிந்து, ஒரு குழந்தை பிறந்துவிட்டால் மிகவும் பொறுப்புடன் தங்கள் பணத்தைப் பத்திரப்படுத்திக்கொள்கின்றனர். இவர்களைச் செலவு செய்யவைக்க என்ன செய்வது? இந்திய மனம், தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக நம்புகிறது. உடனே நிறுவனங்கள் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம், சமூக கௌரவம் என்றெல்லாம் மாயைகளை உருவாக்கி, தங்கம் விற்பதில் வெற்றிகரமான நிலையை எட்டிவிட்டார்கள். இப்போது மக்கள் அனைவரது மனதிலும் தங்க மோகம் சுடர்விட்டு எரிகிறது. எல்லோருக்கும் தங்கம் வாங்க வேண்டும். ஆனால் அவர்களிடம் பணம் இல்லை. என்ன செய்யலாம்? வேறு ஏதோ அவசரத்துக்கு வைத்திருந்த பணத்தை எடுத்து, தங்கம் வாங்கிவிடுகின்றனர். பிறகு, அந்தத் தங்கத்தை அடகுவைத்து அவசரத் தேவையைச் சமாளிக்கின்றனர். வாங்கும்போதே ‘அடகு வைத்துகொள்ளலாம்’ என நினைத்து வாங்கப்படும் ஒரே சொத்து தங்கமாகத்தான் இருக்கும். இத்தனைக்கும் அது மங்கலகரமானது என்ற நம்பிக்கை வேறு நம்மிடம் இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது உங்கள் 100 ரூபாயில் நகைக் கடை, அடகுக் கடை என… இருவர் லாபம் பார்க்கிறார்கள். நாம் இவர்களைக் குறைசொல்வதைக் காட்டிலும், இவற்றை வரம்பின்றி பயன்படுத்தும் போக்கு தவறானது என்பதை உணர வேண்டும்!” கூட்டுறவு வங்கிகள் எங்கே? க.கனகராஜ்,மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம் ”தனியார் அடகுக் கடைகளின் நோக்கமே, அடகு வைப்பவர்கள் நகையை மீட்கக் கூடாது என்பதுதான். அப்படி மீட்காமல் விட்டால்தான், அவர்களுக்கு ஆதாயம். அதனால் முடிந்தவரை, விரைவாகவும் அதிகமாகவும் பணம் தருகிறார்கள். முன்பு கிராமப்புறங்களில் கடன் வழங்கும் அமைப்பாக கூட்டுறவு வங்கிகள் இருந்தன. இப்போது பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் ஒழிக்கப்பட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. கூட்டுறவு வங்கிகளைப் பதிலீடு செய்ய, அரசால் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ‘மைக்ரோ ஃபைனான்ஸ்’ அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் தங்கள் பணத் தேவைக்கு அந்தப் பக்கம் நகர்ந்தார்கள். இப்போது மைக்ரோ ஃபைனான்ஸ்காரர்களும் குண்டர்களை வைத்து கடன் வசூலிக்கும் சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் இறங்க ஆரம்பித்துவிட்டனர். தங்கள் சொந்த வங்கியைப்போல் உரிமையுடன் அணுகிய கூட்டுறவு வங்கி இல்லாத நிலையில், மக்கள் வேறு வழியின்றி தனியார் அடகுக் கடைகளை நோக்கி வருகின்றனர். அங்கு ஏழைகளிடம் எஞ்சியிருக்கும் கடைசி சேமிப்பையும் உறிஞ்சுகிறார்கள். இந்த நிலையை மாற்ற, அரசு வங்கிகள் தங்க நகைக்கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளை மறுபடியும் பரவலாக்கி,அதில் இருக்கும் அரசியல் தலையீடுகளை நீக்கி ஜனநாயகப்படுத்த வேண்டும்!”