சனி, 14 ஜனவரி, 2012

எப்போது என் ஊருக்கு விடிவு?

சட்டசபை தேர்தலின் போது ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? அதன் மூலம் உயிரை பணயம் வைத்து ஆற்றைக் கடந்து செல்லும் நிலை தீருமா என 11 கிராம மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி மற்றும் காவனூர் கிராமத்திற்கிடையே உள்ள வெள்ளாற்றின் மறுகரையில் காவனூர், மருங்கூர், பவழங்குடி, தேவங்குடி, கொடுமனூர் உள்ளிட்ட 11 கிராமங்கள் உள்ளன.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆற்றைக் கடந்து வரவேண்டிய நிலை உள்ளது.
பெரியவர்கள் மட்டுமின்றி பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் ஆபத்தான நிலையில் உயிரை பணயம் வைத்து ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.
மாணவ, மாணவிகள் ஆற்றைக் கடக்கும் போது சீருடையின்றி கடந்த பின்னர் கரையேறி பள்ளிச் சீருடை அணிந்து செல்கின்றனர். இதற்காக புத்தகங்களுடன் ஒரு செட் ஆடையும் எடுத்து வருகின்றனர்.
ஆற்றில் வெள்ளம் அதிகமாக வரும் காலங்களில் காவனூரில் இருந்து 4 கி.மீ., தூரத்திற்குள் வரவேண்டிய ஸ்ரீமுஷ்ணத்திற்கு 30 கி.மீ., தூரம் சுற்றி கருவேப்பிலங்குறிச்சி வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் 15 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பல நாட்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எப்போது ஆற்றில் வெள்ளம் குறைந்து நடந்து செல்லும் அளவிற்கு தண்ணீர் ஓடுகிறதோ அப்போது தான் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மேலும் இப்பகுதி விவசாயிகள் நிலத்திற்குத் தேவையான உரங்களை ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாங்கினால் 30 கி.மீ. தூரம் சுற்றி எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் ஓட்டு கேட்கும் போது மட்டும் மேம்பாலம் கட்டித் தருவதாக வாக்குறுதி அளிப்பதோடு சரி. அதன் பிறகு கண்டு கொள்வதில்லை.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது புவனகிரியில் பேசிய ஜெயலலிலதா, ஆட்சிக்கு வந்தவுடன் கள்ளிப்பாடி வெள்ளாற்றில் உடனடியாக மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்தார்.
தற்போது ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ளதால் மக்களின் தீராத துயராக விளங்கும் வெள்ளாற்று பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுப்பார் என 11 கிராம மக்களும் எதிர்நோக்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக